CAA எதிர்ப்பு ஆதரவாளர்கள் மோதலில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதிகளான ஜாபராபாத், மெளஜ்பூர், சந்த்பாக், குர்ஜிகாஸ் மற்றும் பஜன்புரா பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதேநேரத்தில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் இதற்கு எதிராக களமிறங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல்கள் வெடித்தன. இதில் போலீசார், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பலரும் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சஹத்ரா, அமித் ஷர்மா, அனுஜ் குமார் உள்ளிட்டோரும் படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த வன்முறைகளின் போது சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த ஷாருக் என்ற நபர் துப்பாக்கியால் போலீசார் உள்ளிட்டோரை சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஷாருக் என்ற இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மோதல்களைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் தனியார், அரசு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லிக்கு வருகை தந்த நிலையில் நிகழ்ந்துள்ள இம்மோதல்கள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.