மலேசியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தர்பார் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘தர்பார்’ படம் வெளியாக ரூ.4.9 கோடி வங்கி உத்தர வாதம் செலுத்தாவிட்டால் படத்தை வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா(Lyca) நிறுவனம் தயாரித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் 10 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்வை கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, எங்கள் நிறுவனம் மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்குப் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் ‘2.0’ படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்குக் கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கினோம்.
அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் ‘தர்பார் ‘ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் கடந்த 3-ம் திகதி இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது லைகா நிறுவனம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ”மலேசிய நிறுவனம் கூறுவது போல் எந்தக் கடனும் லைகா நிறுவனம் தரப்பில் தர வேண்டியது இல்லை.
மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். மனுதாரர் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை.
மேலும் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். மனுதாரர்தான் எங்கள் நிறுவனத்திற்கு ரூபா 1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும்.
எனவே, தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்;, ”தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்குப் பதிலாக ரஜினியின் ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.
அவர்கள் கூறும் அனைத்துக் கணக்குகளும் தவறு” எனத் தெரிவித்தார்.
லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமை அளித்ததாகவும் அதற்கான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
DARBAR (Tamil) - Official Trailer | Rajinikanth | AR Murugadoss | Anirudh Ravichander | Subaskaran