சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம்

பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:'சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை' என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார். சபீர் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:வுஹானில் இருப்பவர்களை மீட்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கொள்கையும் இதுதான். 

இதை பாகிஸ்தான் அரசும் பின்பற்றும். சீனாவுடனான எங்களது ஒருமைப்பாட்டை இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரசை சீன அரசு, வுஹான் நகருக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் அதிபுத்திசாலிகள் போல, வுஹான் நகரில் இருக்கும் எங்கள் மக்களை மீட்டு, இங்கு கொண்டுவந்தால், அந்த வைரஸ் காட்டுத்தீ போல இங்கும் பரவ வாய்ப்புள்ளது. 

கொரோனா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும் உணர்ச்சிப் பூர்வமாக முடிவுகளை எடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்புநாடுகள் என்பதும், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது பாகிஸ்தானை சீனா ஆதரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.