ஆளுநராகிறாரா முரளிதரன்?

முரளி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தயா முரளிதரன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.





இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்ட சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியைக் கடந்து உலக அளவில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் முத்தையா முரளிதரன். இந்தியத் தமிழரான அவர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால், சிங்களப் பேரினவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளித்ததாக தமிழ் மக்கள் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தற்போதைய இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை வெளிப்படையாக ஆதரித்தவர். 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.





உலக அரங்கில் ராஜபக்ச சகோதர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, முரளிதரன் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இலங்கையில் எந்த போர்குற்றமும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்துவந்தார். ராஜபக்ச சகோதரர்களுக்கு முத்தையா முரளிதரன் பேசிவருவது, இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகணப் பகுதிக்கு முரளிதரன் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவருகின்றன.





இதுகுறித்து தெரிவித்த கண்டியைச் சேர்ந்த தமிழ் செய்தியாளர், ‘இலங்கையில் போர்குற்றமும், இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்று பொதுவெளியில் முரளிதரன் வாதத்தை முன்வைத்தார். அவர் எப்படி அப்படித் தெரிவித்தார்? அவர் ஒரு தமிழன் இல்லையா? நாங்கள் முழுவதுமாக அவர் மீது அதிருப்தியில் உள்ளோம். ராஜபக்ச சகோதரர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார். இது மோசமானது’ என்று தெரிவித்தார்.





இதுகுறித்து கொழும்புவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர், ‘கோத்தபயவால் வடக்கு மாகணப் பகுதியிலுள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 80% சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் அவருக்கு எதிராக வாக்குப் பதிவு செய்துள்ளனர். முரளிதரனையும் தமிழ் மக்கள் வெறுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.





கோத்தபய ராஜபக்சவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, ‘முரளிதரனுக்கு அரசியல் பதவி ஒன்று வழங்கவேண்டும் என்று கோத்தபய விரும்புகிறார். ஆனால், முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.





இதுகுறித்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், ‘இது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். முரளிதரனை ஆளுநராக தேர்வு செய்யாவிட்டாலும் வேறு பல பொறுப்புகள் உள்ளன. கண்டிப்பாக ஏதேனும் பொறுப்பில் முரளிதரன் நியமிக்கப்படுவார்’ என்று தெரிவித்தார்.



Blogger இயக்குவது.