பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை.
நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கு எதிரான வாக்களித்து விட்டதால் பிரெக்ஸிட்டை முன்னெடுத்து செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் எம்பிக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் அக்டோபர் 31ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
ஆனால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், பிரதமர் போரிஸ் ஜாண்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறியுள்ளது.
பிரெக்ஸிட்டுக்கு இன்னும் 3 மாத காலம் நீட்டிப்பு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதிய போரிஸ் ஜான்சன், பின்னர் அதில் கையெழுத்திடவில்லை.
நாடாளுமன்றத்தின் பொது அவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனவுடன், பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பை அரசு அல்ல, நாடாளுமன்றமே கேட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துவிட்டார்.
அக்டோபர் 31ம் தேதியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதே தனது கொள்கை நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
காலக்கெடுவுக்கு முன்னால், தேவையான சட்டங்களை இயேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது மிகவும் கடினம் என்று நாடாளுமன்ற பொது அவையின் தலைவர் ஜேக்கப் ரீஸ்-மோக் எம்பிக்களிடம் கூறியுள்ளார்.