தமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை ...கொட்டும்!
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தீபாவளி வரை, கன மழை கொட்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், எட்டு மாவட்டங்களுக்கு, இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு, நேற்று மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது.
விற்பனை
அந்த மாவட்டங்களில், நேற்று பரவலாக கனமழை பெய்தது. நேற்று பகலில், 'ரெட் அலர்ட்' விலக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதற்கிடையில், மழையும் பெய்து வருவதால், தீபாவளி விற்பனை பாதிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், 'தீபாவளிக்கு முன்தினம் வரை மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல துணை இயக்குனர் ஜெனரல் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
நீடிப்பு
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது. வங்கக் கடலின், மத்திய மேற்கு பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது, மேலும் வலுப்பெற்று, வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும்.
சென்னை, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி, அரியலுார், பெரம்பலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீனவர்கள், அந்த பகுதிக்கு, இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளிக்கு முதல் நாளான, 26ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில், லேசான மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யும்' என, கூறப்பட்டுள்ளது.
எங்கே; எவ்வளவு?
தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் முதல், நேற்று காலை, 8:30 மணி வரை, அதிக பட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது. ராமேஸ்வரம், 17; காரைக்கால், புதுக்கோட்டை, 11; சேலம், மோகனுார், 10; மாமல்லபுரம், பெருங்களூர், பெருஞ்சாணி, 9; தரங்கம்பாடி, 8; பரமத்திவேலுார், தஞ்சாவூர், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பவானிசாகர், இளையான்குடி, பூந்தமல்லி, 6; தர்மபுரி, காரைக்குடி, நாகை, அதிராம்பட்டினம், 5; ராயக்கோட்டை, மயிலாடி, கேளம்பாக்கம், 3; சென்னை - நுங்கம்பாக்கம், டி.ஜி.பி., அலுவலகம், அண்ணா பல்கலை, சோழவரம், பொன்னேரி, 3; சென்னை விமான நிலையம், 2; தாம்பரம், 1 செ.மீ., மழை