ஜப்பானை தாக்கிய சூறாவளி பலர் உயிரிழப்பு
ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை சூறாவளியால் அழிவடைந்துள்ள டோக்கியோவில் மீட்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானை நேற்று முன்தினம் சனிக்கிழமை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி டோக்கியோவின் தென்பகுதி ஊடாக வடக்கை நோக்கி நகர்ந்தது.
இதனால் ஜப்பானில் பல இடங்களில் கடும் மழை பெய்துள்ளதுடன், அதனால் பாரிய வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நகானா நகரம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது.
இதனால் ஜப்பானின் மிகவும் பிரபல்யமான புல்லட் புகையிரதம் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. அதேவேளை வெள்ளம் புகுந்துள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளின் கூரைகள் மீது ஏறிதப்பியுள்ளனர்.
இந்த நிலையில் மீட்புப் பணிகளில் 27 ஆயிரம் இராணுவத்தினர் உழங்கு வானூர்திகள் சகிதம் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வெள்ளம் காரணமாக டோக்கியோவின் வட பகுதி நகரமான கவாகோவில் மக்கள் படகுகளை பயன்படுத்தி வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, புகையிர மற்றம் விமான சேவைகளும் இரத்தச் செய்யப்பட்டுள்ளன.