5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்; திருச்சி ஆட்சியர் பேட்டி


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).







பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஓராண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது.
இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித் வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித் வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.
இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.  இந்நிலையில் குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றது.  இதனால், ஓ.என்.ஜி.சி.யின் ரிக் இயந்திரம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இயந்திரம், ஆழ்துளை கிணறு அருகே நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.  ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் குழி தோண்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி ஒன்று அமைக்கப்படும்.  அதில் இருந்து சுரங்கம் மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆழ்துளை கிணறு அருகே அமைக்கப்படும் பக்கவாட்டு குழியில் இறங்க ராம்குமார், திலீப், தனுஷ், அபிவாணன், கண்ணதாசன் மற்றும் மணிகண்டன் என்ற 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.  அவர்கள், 110 அடி ஆழ குழிக்குள் சுரங்கம் வழியே சென்று சுஜித்தை மீட்டு வருவார்கள்.
இதனிடையே, கற்பாறைகள் அதிகமாக இருப்பதால் ரிக் இயந்திரம் சூடானது.  இதனால் சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  பின்னர் மீண்டும் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரை 4 மணிநேர முயற்சியில் 34 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு உள்ளது.  சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கும் பணிகள் 42 மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகின்றன.  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் குழியானது முழுமையாக தோண்டப்படும் என திருச்சி ஆட்சியர் சிவராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.


Blogger இயக்குவது.