புர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு - பாஜகவினர் தடுத்தது உண்மையா?


முஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர் புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.





ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் கட்ட மக்களவைத் தொகதி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்த காணொளி வலம் வருகிறது.





இந்தியாவில் நடைபெறும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. மே மாதம் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.





புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார்.





அவர் குற்றம்சாட்டுவது ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.





"பிஜேபி மிஷன் 2019" மற்றும் "வி சப்போர்ட் நரேந்திர மோதி" போன்ற வலது சாரி ஃபேஸ்புக் குழுக்களும் இந்த காணொளியை பகிர்ந்துள்ளன.





தற்போது நடைபெற்று வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கும், இந்த காணொளிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.





உண்மை என்ன?
இந்த காணொளியிலுள்ள எழுத்துகள், "கள்ள ஓட்டு போட்ட புர்கா அணிந்த பெண்களை பாஜக முஸ்லிம் ஊழியர் பிடித்தார்," என்று குறிப்பிடுகிறது.





இந்த காணொளியை கவனமாக செவிமடுத்தால், அந்த பெண் கூறுவதும் கேட்கிறது. அந்த பெண், "நான் பிஎஸ்பி வேட்பாளர் ஷாய்லா. பெண்கள் பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. உண்மையை சொல். இந்த ஆதார் அட்டைகளை உன்னிடம் கொடுத்தது யார்?" என்கிறார்.









ஊடக தகவல்களின்படி, 2017ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஃபேஷன் வடிவமைப்பாளர் ஷாய்லா கானை ராம்பூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தியது. உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.





இப்போது வைரலாகும் காணொளி யூடியூபில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி பதிவேற்றப்பட்டது. இது உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல்களுக்கு ஒரு நாளுக்கு பின்னராகும்.





இத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தி தகவலையும் காண முடியவில்லை. ஆனால், இந்த காணொளி 2019ம் ஆண்டை சேர்ந்தது அல்ல. இந்த மக்களவைத் தேர்தலில் இது நடைபெற்றதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.





தேர்தல் நேரத்தில் போலிக் கூற்றுக்கள்





முதல் கட்ட தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன என்று இன்னொரு காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.





35 வினாடிகள் உள்ள இந்த காணொளியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைப்பதையும், ஓங்கி மிதிப்பதையும் பின்னர் தீயிட்டு கொளுத்துவதையும் காணலாம்.









இந்த காணொளி இரண்டு வேறுபட்ட பகுதிகளை சார்ந்தது என்று கூறப்படுகிறது.





அதிலுள்ள எழுத்துகள், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாண்டி, பூஞ்சில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன. எல்லா வாக்குகளும் பாஜக-வுக்கு செல்கின்றன. காவலாளி ஒரு திருடன்" என்று தெரிவிக்கின்றன.





இந்த காணொளி நஸ்ருல்லா போராவை சேர்ந்தது என்றும், எல்லா வாக்குகளும் பாஜகாவுக்கு செல்கின்றன என்று கூறியும் பகிரப்படுகின்றன.





70 ஆயிரத்திற்கும் மேலான பின்தொடர்பவர்களை கொண்டிரக்கும் டெய்லி இந்தியாவின் ஃபேஸ்புக் பக்கம், "2019 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம். பிற கட்சிகளுக்கு பொத்தான்களை அழுத்தினாலும், எல்லாம் பாஜகவுக்கு செல்கின்றன. கோபமடைந்த மக்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை தீயிட்டு கொளுத்தினர்," என பதிவிட்டு இந்த காணொளியை பகிர்ந்துள்ளது.





இந்த காணொளி 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது என்பதை கண்டறிந்தோம். எனவே, 2019 தேர்தலோடு இதற்கு எந்த சம்பந்தமும் கிடையாது.





ஸ்ரீநகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பிரிவினைவாத தலைவர்கள் வாக்களிப்பதை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்ததற்கு மத்தியில், கோபமடைந்த மக்கள் கூட்டம் வாக்குப்பதிவு மையங்களை இலக்கு வைத்து தாக்கியது.





ஊடக தகவல்களின்படி, 33 இவிஎம் இயந்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த காணொளி இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் தோன்றியதாகும்.





இந்த காணொளி மண்டி அல்லது நஸ்ருல்லா போராவை சேர்ந்தது அல்ல.





இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டியில் மே மாதம் 19ம் தேதி ஏழாவது கட்ட தேர்லின்போது வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலின்போது ஜம்மு காஷ்மீரிலுள்ள பாரமுல்லா மற்றும் ஜம்மு தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளன.





நஸ்ருல்லா போரா, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான பட்காமிலுள்ளது. ஸ்ரீநகரில் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின்போது நடைபெறுகிறது.


Blogger இயக்குவது.