இலங்கை திருக்கேதீஸ்வரம் சம்பவம்: மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது


மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து, மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து வெளியேற இந்து குருமார்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.





மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு அலங்கார பலகையை தற்காலிகமாக மீள அமைப்பதற்கு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.





மன்னார் போலீசார் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மன்னார் நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.





Thiruketheeswaram




இதன்படி, திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயிலில் நான்கு நாள்களுக்குள் இந்த அலங்காரப் பலகையை தற்காலிகமாக அமைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





இந்த விவகாரத்தை அடுத்து, மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து, இந்து குருமார் சங்கம் வெளியேறியது.





திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அடுத்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்புப் பலகை, சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே இந்து குருமார்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.





சர்வமத பேரவையில் தமக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையிலேயே, தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மன்னார் மாவட்ட இந்துமத குருமார் பேரவை தலைவர் சிவஶ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்துள்ளார்.





சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்திற்கு பிரவேசிக்கும் மாந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்பு பலகை, நேற்று சேதமாக்கப்பட்டிருந்தது. இதனை கிறிஸ்வர்கள் சிலரே செய்ததாகவும் கூறப்பட்டது.





இந்த சம்பவமானது, தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக மன்னார் மாவட்ட இந்துமத குருமார் பேரவை தலைவர் சிவஶ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.





இந்நிலையில், சர்வமத பேரவையில் தொடர்ந்து செயல்பட விருப்பம் இல்லாமையினால், அந்த பேரவையிலிருந்து விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





திருக்கேதீஸ்வரம் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அதிரடி நடவடிக்கை





இதேவேளை, மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்றைய இடம்பெற்ற அசம்பாவித சம்பவமானது, நாட்டில் வாழக் கூடிய தமிழர்களுக்கு சாபக்கேடாகவும், வெட்கப்படக்கூடிய செயலாகவும் அமைந்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.





சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் இதுவரை காணப்பட்ட பிரச்சினை, தற்போது தமிழர்களுக்கு இடையிலேயே மதம் சார்ந்து ஏற்பட்டுள்ளமையும் வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





மதகுருமார்கள் சட்டம் ஒழுங்கை மீறுவார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.





இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடனும் தான் கலந்து பேசி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


Blogger இயக்குவது.