இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தக்குற்றம் ஒன்று இடம்பெறவேயில்லை என முன்னாள் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் நேற்றுமுன் தினம் கூட்டாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் திசரசமரசிங்க ஆகியோரே இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கொழும்பு - 7, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதன்போது விடயங்களை முன்வைத்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க குறிப்பிடுகையில்,
கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் எமது இராணுவம் மற்றும் முப்படைகளின் அங்கத்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் பலர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இரு சிப்பாய்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (இந்த தண்டனை தற்போதைய திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்டுள்ளது).
இப்போதும் இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஐவர் வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் மொத்தமாக இராணுவத்தின் அதிகாரிகள் 8 பேரும், சிப்பாய்கள் 25 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கடற்படையில் 7 அதிகாரிகள், 10 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் இன்னும் விளக்கமறியலிலேயே உள்ளனர்.
அதேபோல் இராணுவத்தில் மட்டும் 67 அதிகாரிகளும், 637 சாதாரண வீரர்களும் இந்த விசாரணைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில், படையினரை கைது செய்ய வேண்டாம். அவர்களை தண்டிக்க வேண்டாம் என பேச வரவில்லை. அவற்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆட்சேபனை இல்லை.
எனினும் கடந்த 30 வருட கால யுத்தமானது, 30,000இற்கும் அதிகமான பொலிஸ், இராணுவ, விமான, கடற்படையினரின் உயிர் தியாகம், 40,000இற்கும் அதிகமான படையினரினர் உடல் தியாகம் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினரின் சேவை தியாகத்தினாலேயே வெற்றி கொள்ளப்பட்டு இந்த சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது.
இதன் மறுபக்கம், நாட்டின் ஜனாதிபதிகள், பிரபுக்கள் உள்ளிட்ட பலரைக் கொலை செய்த பள்ளிவாசல், கோயில், விகாரைகளில் குண்டு வைத்த எமது பொருளாதார மர்ம ஸ்தானங்களை தாக்கிய உலகின் கொடிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 14,000 பேர் யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சரணடைந்தவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியை கொலை செய்ய வந்த பயங்கரவாதிக்கும் எமது நாட்டில் மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு பக்கம் அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து, புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தி அவர்களை இன்னும் நாம் பராமரிக்கின்றோம்.
இவ்வாறான ஒரு நிலைமை இருக்கும் நிலையிலேயே உலகின் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்த எமது படையினர் தொடர்பில் மட்டும் மாற்று போக்கில் நடந்து கொள்வது தான் எமக்குள்ள பிரச்சினையாகும்.
தமது கடமைக்கு அப்பால் சென்று குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் யுத்தம் நடந்த 30 வருடங்களுக்குள் குற்றமிழைத்தவர்களை முப்படையினர் எவ்வாறு தண்டித்தனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கடந்த காலங்களில் உள்ளன.
இதற்கு சிறந்த உதாரணம் இந்த யுத்தத்தின் திருப்பு முன்னையாக இருந்த 1983 ஜுலை 23ஆம் திகதியின் பின்னர் இராணுவத்தில் மட்டும் 69 பேர் வெளியேறி விசேடமாக யாழில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதன்போது முழு இராணுவமும் இணைந்து அவர்களை கைது செய்தது.
அந்த 69 பேரையும் யாழில் பாதையில் நிறுத்தி வைத்திருந்த அப்போது இருந்த இராணுவத் தளபதி நேரடியாக வந்து அவர்களை அவர்கள் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கினார்.
அதன் பின்னர் அவர்களை இரு பேருந்துகளில் அனுராதபுரம் சிறைக்கு அழைத்து வந்து அங்கு வைத்து அப்போது இராணுவத்தில் இருந்த அதி உச்சபட்ச தண்டனையான ட்ரமவுட் எனும் தண்டனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த முன்னுதாரணம் யுத்தம் முடிவடையும் வரை இராணுவத்தில் இருந்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் தவறிழைக்கும் போது அவர்களைக் காக்க இராணுவம் முயற்சிக்கவில்லை.
இராணுவத்தினரை இராணுவ மற்றும் சிவில் நீதிமன்றங்களில் இராணுவமே நிறுத்தி அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுக் கொடுத்த வரலாறும் உள்ளமை உங்களுக்குத் தெரியும்.
ஆயுள் தண்டனை கொடுத்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அவர்கள் செய்த ஒழுக்கக்கேடான செயற்பாடுகளுக்காக அதிகமானவர்களுக்கு சிறைத்தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் இராணுவம் ஒரு போதும் இராணுவம் என்ற வட்டத்திற்குள் இருந்து சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரையும் பாதுகாக்கவில்லை என்பது நிதர்சனம். எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
எமது பிரச்சினை, 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர போராடிய படை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளாகும்.
உண்மையிலேயே அவர்கள் குற்றமிழைத்திருந்தால் அவர்களைத் தண்டிக்க ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும். எமது பிரச்சினை அந்த முறைமையாகும்.
படையினரின் சுய கௌரவத்தைப் பாதிக்காத வகையில் அந்த முறைமை அமைய வேண்டும். எனவே தான் நாம் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துகின்றோம்.
தற்போது உலகில் மனித உரிமைகள் தொடர்பிலான மாநாடுகள் நடக்கின்றன. இந்த காலப்பகுதியில் நாம் கடலில் இருந்து ஒரேயடியாக மீன்களை கரையில் போடுவது போல பல வழக்குகளை மீண்டும் மீண்டும் கிளறி படையினரை சீண்டுகின்றனர்.
கடந்த நாட்களில் பத்திரிகையில் இருந்த செய்திகளின் படி யுத்தத்தை வெற்றி கொள்ள பாரிய சேவையாற்றிய கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரன்னாகொட தான் எவராலும் வெற்றி கொள்ள முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை வெற்றி கொள்ள மிக முக்கிய பங்காற்றிய அதிகாரியாவார்.
கடந்த காலத்தில் முப்படைகளின் அலுவலக பிரதானியை கைது செய்தனர். இராணுவத்தின் அலுவலக பிரதானியை கைது செய்தனர். முப்படைகளின் உளவுப்பிரிவு வீரர்கள் பலரைக் கைது செய்தனர்.
இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுவிக்கப்படும் போது அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இது தான் எமது பிரச்சினையாகும். உண்மையில் தற்போது யுத்தத்தின் பின்னர் நாம் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம்.
விசேடமாக நல்லிணக்கத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோம். இந்த நல்லிணக்கத்தை அடைய எந்தக் குறுகிய பாதைகளும் இல்லை. அது தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள், அனைத்து சமூகத்தவர்களும் விரும்புவதாக இருக்க வேண்டும். ஒழுக்கமுள்ள சமூகமொன்று அது தொடர்பில் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
பொருளாதார மட்டத்தில் வெற்றிகள் அதற்கு அவசியம். அதேபோல் அரசியல் ஸ்திரத்தன்மையும் அது தொடர்பில் மிக அவசியமாகும். அப்படியான சந்தர்ப்பத்தின் போதே நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சாத்தியமாகும்.
அப்படியானால் இந்த நிலைமை ஏற்படக் காரணமான அதற்காக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினரை மறந்து அவர்களைத் தண்டித்து நல்லிணக்கம் நோக்கிச் சென்றால் அது சாத்தியப்படாது.
அது ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையிலேயே அமையும் என்பதே எமது நம்பிக்கை. இவ்வாறானதொரு நிலைமையைக் கட்டுப்படுத்துமாறே நாம் ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் கோருகின்றோம் என்றார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யுத்தத்தின் போது இரு தரப்பிலும் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிப்படுத்தியுள்ள கருத்துகளை முன்னிறுத்தி ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
சுமந்திரனின் கருத்து தொடர்பில் நாம் மிகத் தெளிவாக உள்ளோம். அவர் தொடர்ந்தும் குறுகிய நோக்கங்களுக்காக அரசாங்கம் மற்றும் எமது படையினர் தொடர்பாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி வருபவர்.
எது எவ்வாறு இருப்பினும் யுத்தத்தில் பங்கேற்றவர்கள் என்ற வகையில் நாம், யுத்தக் குற்றம் இங்கு இடம்பெறவில்லை என்பதை உறுதியாக நம்புவதுடன், தெளிவாக அதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
யுத்தக் குற்றம் என்பது இராணுவ வீரர் சென்று செய்யும் குற்றமில்லை. மாறாக திட்டமிடப்பட்டு ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் குற்றம்.
அவ்வாறான எந்தக் குற்றங்களும் இடம்பெறவில்லை. எனினும் யுத்தம் இடம்பெறும் போது பொதுச் சட்டத்திற்கு அப்பால் சென்று சமூக விரோதச்செயல்களை புரிந்த இராணுவ வீரர்கள் இருந்தனர்.
அவ்வாறான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் அறிந்து கொண்டதும், தண்டனை வழங்கியுள்ளோம். எனினும் யுத்தக் குற்றம் நடந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்.
இதன்போது இராணுவத்தினர் தொடர்பில் கைது விசாரணை மேற்கொள்வது தொடர்பில் சிறப்பு முறைமை ஒன்றை ஏற்படுத்த ஜனாதிபதி உள்ளிட்டவர்களிடம் ஏதும் திட்டங்களை கொடுத்தீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெனரல் தயா ரத்நாயக்க,
நாம் அது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம். உண்மையில் அவ்வாறு விசாரணைக் கைதுகளை முன்னெடுக்க உலகின் ஏனைய நாடுகளில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதற்கான முறைமைகளும் உள்ளன.
இதற்கு முன்னர் இராணுவத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் நாம் இவ்வாறான முறைமைகளை காட்டியிருக்கின்றோம்.
குறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பிலான சம்பவத்தின் போது யார் நீதியை நிலைநாட்டியது? குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க இராணுவமே செயற்பட்டது.
வேறு நபர்கள் கதைத்த போதும் இராணுவத்தினரே குற்றவாளிகளைக் கைது செய்தனர். இராணுவத்தினரே குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இராணுவத்தினரே அவர்களை சிவில் நீதிமன்றம் முன் ஆஜர் செய்து தண்டனையும் பெற்றுக் கொடுத்தனர் (அன்று செம்மணி வழக்கிற்கு தீர்ப்பு எழுதியவர் தற்போதைய திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்).
அப்படியானால் இப்போதும் அதே நடைமுறைகளைப் பின்பற்ற முடியும். விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் நேரிடையாக இராணுவத்தினருக்கு வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
மாற்றமாக விசாரணை என்ற பெயரில் கைது செய்து மாதக் கணக்கில் வருடக் கணக்கில் விளக்கமறியலில் அடைத்து வைப்பது பொருத்தமற்றது. இராணுவ வீரனுக்கு அவனது உயிரை விட கௌரவம் மற்றும் சுய கௌரவம் மிக முக்கியமானது.
எனவே மாற்று விசாரணைப் பொறிமுறையில் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படல் வேண்டும் என்றார்.
எயா சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக குறிப்பிடுகையில்,
நம் நாடு என்ற ரீதியில் எமது இறைமையைப் பாதுகாக்க பயங்கரவாதிகளுடன் போரிட்டு அதன் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த எம்மால் முடியுமாகியுள்ளது.
அப்படியானால் அந் நடவடிக்கையானது நாடு என்ற ரீதியில் எமது பொறுப்பை சரியாகச் செய்துள்ளோம் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
இதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்காக இவ்வாறு பெரும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் தமிழ் கட்சிகள் நல்லிணக்கம் தொடர்பில் அவர்களது தற்போதைய செயற்பாடுகளை விடவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிங்களவர்கள் என்ற ரீதியில் எமது பொறுப்பை நாம் சரியாக செய்துள்ளோம். எனவே நல்லிணக்கத்தை வெற்றிகரமாக்க தமிழ் தரப்பில் கூடுகல் நடவடிக்கை அவசியமாகின்றது என நான் நினைக்கின்றேன்.
யுத்தத்தில் எனது சகோதரன் கொல்லப்பட்டார். விமானியாக அவர் மேலும் பலருடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார்.
அப்படியான நிலையில் யுத்தத்தின் பின்னர் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமான குழுவினை எம்மால் மன்னிக்க முடியுமாகியுள்ளது. அப்படியானால் அடுத்த தரப்பு வேண்டும் என்றார்.
அட்மிரல் திசர சமரசிங்க குறிப்பிடுகையில்,
இந்த நாட்டுக்கு நாம் பெற்றுக் கொடுத்துள்ள சமாதானம் முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அவ்வாறு ஒன்றிணையும் போது நாம் அனைவரும் பேதங்கள் இன்றி செயற்பட வேண்டும். இந்த நிலைமையை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைத்து படையினரும் கௌரவப்படுத்தப்படல் வேண்டும்.
இராணுவத்தினருக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். அவர்கள் குற்றம் இழைத்தால் உரிய முறையில் தண்டிக்கலாம். அது தொடர்பில் ஆட்சேபனம் இல்லை என்றார்.
இலங்கை வரலாற்றில் இராணுவத்தினர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 296ஆம் தண்டனை குற்றக்கோவை பொதுச் சட்டம் உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும். குற்றம் இழைத்ததாக தெரிவிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் சிங்கள ஜுரி சபையை கோரினால் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதே வழக்கமாக உள்ளது.
கடந்த காலத்தில் நீதிபதி இளஞ்செழியனால் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டதை போன்று எதிர்வரும் காலத்திலும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் சிங்கள ஜுரி சபையை கோரினால் விடுதலை செய்யப்படலாம் என்ற நிலைப்பாடு உள்ளது.
எனவே அரசாங்கம் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா அல்லது தண்டனை வழங்குவது போல் வழங்கி சிங்கள ஜுரி சபையினூடாக அவர்களை காப்பாற்றுமா என்பது கேள்விக்குறியே...!