அஞ்சேலோ மேத்யூஸின் ‘உலகசாதனை’ என்ன தெரியுமா? அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கினோம்: கோச் ஹதுரசிங்கே விளக்கம்

இலங்கை அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அஞ்சேலோ மேத்யூஸ், தற்போது அணியிலிருந்தும் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதை இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.

ஆசியக் கோப்பையிலிருந்து படுதோல்வியடைந்து வெளியேறியது இலங்கை, இதனையடுத்து மேத்யூஸை நீக்கும் முடிவை எடுக்க அதற்கு இவரும் பெரிய கடிதம் மூலம் ‘தான் பலிகடாவா’ என்று கேட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அணியிலிருந்து தான் நீக்கப்படுவோம் என்று மேத்யூஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணங்களையும் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.

அதாவது பந்துவீச்சை நிறுத்தி விட்ட மேத்யூஸ், பேட்டிங்கில் சகவீரர்களின் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார் அதனால்தான் நீக்கம் என்று சூசகமாகத் தெரிவிக்கிறார் பயிற்சியாளர் ஹதுரசிங்க.

விக்கெட்டுகளுக்கிடையே ஓடுவதில் மேத்யூஸ் மந்தமாக இருப்பதோடு எதிர்முனை வீரர்களையும் ரன் அவுட் ஆக்கி ‘விக்கெட்டுகளை’ எடுத்து விடுகிறார் மேத்யூஸ் என்பதே ஹதுரசிங்கவின் காரணமாக உள்ளது.

இதனை இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் கிரேம் லெப்ராய் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

மேத்யூஸ் ரன் ஓடுவதில் மந்தமாக இருக்கிறார் என்பதோடு லெப்ராய் நிறுத்திக் கொள்ள, பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்க இன்னும் ஒரு படி மேலே போய் தனது மோசமான ரன் ஓட்டத்தினால் தன்னுடன் ஆடுபவர்களை ரன் அவுட் ஆக்கி விடுகிறார் மேத்யூஸ் என்று குற்றம்சாட்டினார்.

ரன் அவுட்டில் இவர் பங்கேற்பாளராக இல்லை மாறாக எதிர்முனை பேட்ஸ்மென் ரன் அவுட் ஆவதற்கும் மேத்யூஸ் காரணமாக விளங்குகிறார் என்கிறார் ஹதுரசிங்க.

மேலும் 50 ஓவர்கள் களத்தில் பீல்ட் செய்வதற்கும் பிறகு பேட்டிங் செய்வதற்குமான உடற்தகுதி மேத்யூஸிடம் இல்லை. அணி வீரர்களே அவரைச் சுமையாகக் கருதுகின்றனர் என்ற குண்டையும் ஹதுரசிங்க தூக்கிப் போட்டுள்ளார்.

“64 ரன் அவுட்டுகளில் மேத்யூஸ் பங்கு உள்ளது, இதில் 49 முறை எதிர் முனை பேட்ஸ்மென் இவரால் ரன் அவுட் ஆகியுள்ளார். இது உலக சாதனை. இது போன்ற விஷயங்களைத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அவர் விரைவில் இந்தக் குறைகளைச் சரிசெய்து கொண்டு மீண்டும் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே விரும்புகிறோம்.” என்கிறார் ஹதுரசிங்க.
Blogger இயக்குவது.