ட்ரோன் வருதுடோய் கண்காணிப்பின்போது கேரம் போர்டுக்குள் மறைந்த சிறுவன்
திருப்பூரில் காவல்துறையின் டுரோன் கேமரா கண்காணிப்பின்போது சிறுவன் ஒருவன் கேரம் போர்டுக்குள் மறைந்த சம்பவத்தை விழிப்புணர்வு விடியோவாக காவல் துறையினர் பதிவுசெய்து வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீஸார் டுரோன் கேமார மூலமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், திருமுருகன் பூண்டி போலீஸார் கணியாம்பூண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை டுரோன் கேரமா மூலமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த விளையாட்டு மைதானத்தில்சிறுவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக நின்று கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை டுரோன் கேமரா மூலமாக படம் பிடித்த போலீஸார் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்துள்ளனர். இதில் அச்சமடைந்த சிறுவர்கள் திசைக்கொருவராக தெறித்து ஓடத் துவங்கினர்.
அதில் ஒரு சிறுவன் கேரம் போர்டை கொண்டு மறைந்து அமர்ந்து கொண்டான். ஆனால் டுரோன் கேமரா அவனை விடாமல் சுற்றிச் சுற்றி வந்ததால் பயந்து போய் சிறிது தூரம் கேரம் போர்டை தூக்கி ஓடியவன் ஒரு கட்டத்தில் அந்த போர்டையும் கீழே வீசி விட்டு ஓடிய காட்சிகளை தற்போது போலீஸார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை டுரோன் கேமரா மூலம் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த காட்சியை விழிப்புணர்வுக்காக திருப்பூர் மாநகர காவல்துறையினர் நகைச்சுவையாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.