ஆய்வாளர் அனுராதாவின் காளை அவனியாபுரத்தை தொடர்ந்து அலங்காநல்லூரிலும் அசத்தல்!


ஆய்வாளர் அனுராதாவின் காளை


உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இதில் 700 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்குபெறுகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. பிரபலமான ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால் இதைப் பார்ப்பதற்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்துள்ளனர். ஏராளமான வெளிநாட்டினரும் குவிந்து உள்ளனர். முதல் சுற்றில் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவில், அவிழ்த்து விடப்பட்ட 64 காளைகளில் சிறந்ததாக 3 காளைகளும், சிறந்த மாடுபிடி வீரர்களாக பிரபாகர், ஆனந்த், பிரபு ஆகிய 3 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். 2-வது சுற்றும் நிறைவு பெற்றது. பிரபாகர் என்பவர் இதுவரை 6 காளைகளை பிடித்துள்ளார். விஜயகுமார் என்பவர் இதுவரை 4 காளைகளை பிடித்துள்ளார்.


அவனியாபுரத்தில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் காளை ராவணன், அலங்காநல்லூரிலும் ருத்ர தாண்டவம் ஆடியது.


அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் காளைகளை அவிழ்த்து வரிசையாக கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தப்பட்டது.


அதுபோல் பழனி நெய்க்காரபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது, 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.


புதுக்கோட்டையில் வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது, இதில் 450 காளைகளும், 210 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.



திருச்சி மணப்பாறை அருகே ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. போட்டியில் 700 காளைகளும், 400 மாடு பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர்.


Blogger இயக்குவது.