சிஏஏ (CAA) குறித்து முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி
நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா சார்பில் மும்பையில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேரணிக்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் பா.ஜனதாவின் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.
பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் இந்த நாட்டின் மக்கள் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மத துன்புறுத்தல்களை எதிர்கொண்ட அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினருக்கு உதவுவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாரதீய ஜனதா மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
பிரிவினையின்போது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அவர்கள் நம் மக்கள் என்பதால் இந்தியா அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மாநிலங்களில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு நிறைவேற்றமாட்டோம் என சிலர் கூறுவதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பது தெரிகிறது” இவ்வாறு அவர் கூறினார்.