பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு 4 நபர்கள் போலீஸ் சுட்டுக் கொலை


ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.





நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.





இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.





தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.





குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், ``ஆள்கடத்தல், திருட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவை தொடர்ந்து கொலை செய்தது மற்றும் கிரிமினல் சதி'' குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றக் காவல் அறிக்கையில் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.





இதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.





இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமையன்று காலை எண்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.





சைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார், "குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சத்தன்பல்லியில் அதிகாலை மூன்று 3 மணி முதல் 6 மணி வரையளவில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன்; மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்," என தெரிவித்தார்.





காவல்துறைக்கு ஆதரவான கோஷங்கள்





என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 2000 பேர் கூடியுள்ளனர் என்கிறார் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து பிபிசி தெலுகு சேவையின் செய்தியாளர் சதிஷ் பல்லா.





அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன பலர் போலீஸாருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகின்றனர்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சம்பவ இடத்தில் போலீஸாரின் மீது மலர் தூவி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






https://twitter.com/ANI/status/1202813607781625856




எனது மகள் திரும்ப வரப்போவதில்லை’





"எனது மகள் இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. காவல்துறைக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்," என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.





"என்னால் இப்போது பேச முடியவில்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. எனது மகள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் அவளின் ஆத்மா தற்போது சாந்தியடைந்திருக்கும். போலீஸாருக்கும், அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகள் திரும்ப வருவாள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் கடைசியாக வீட்டை விட்டு சென்றபோது உணவு உண்ணாமல் சென்றுவிட்டாள்," என்று கொலைசெய்யப்பட்ட மருத்துவரின் தாய் தெரிவித்துள்ளார்.





மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு





இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.





"இவர்கள்தான் குற்றம் செய்த புரிந்தனர் என்று சொல்வதற்கு நம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளனவா? எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா? எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா? அவர்கள் குற்றம் செய்ததாக நாமாக நினைத்துக் கொள்கிறோம். எதற்குமே ஒரு முறை உண்டு" என மனித உரிமை ஆர்வலர் ரபேக்கா மாமென் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.





"இம்மாதிரியான என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது.





"டெல்லி வழக்கில் நாம் கோவத்துடன் செயல்பட்டு சட்டத்தின்மூலம் நீதி பெற்றோம். ஆனால் தற்போது என்கவுன்டர் செய்தது மூலம் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம்." என மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் தெரிவித்துள்ளார்.





என்ன நடந்தது?





கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.





இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.






https://youtu.be/M_AsTo_GRKg

Leave a Comment

Blogger இயக்குவது.