பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார தேரர்
ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்தோடு கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றுள்ளதால் தமது அமைப்பிற்கான தேவை இனிமேல் இல்லை என்றும் இதனால் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சிங்களதீவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியோக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாங்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்த சிறந்த தலைவர் எமக்கு தற்போது கிடைத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தனர். ஆனால் நாங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டே தனிச்சிங்கள தலைவரொருவரை உருவாக்க முடியும் என்று தெரிவித்தோம். அது இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.
அரசியல் வாதிகள் சிறுபான்மையினரின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் அவர்களுடன் அரசியல் மேடைகளில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் மேடைகளில் ஏறாவிட்டாலும் சிங்கள தலைவரொருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக விகாரைகள் தோறும் எமது பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதற்கான பலன் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. தேரர்கள் இணைந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்துள்ளோம்.
வெற்றி ஆரவாரத்தில் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல் ஒருமித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தோல்வியடைந்துள்ள தரப்பினர் நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். நாம் அவர்களின் வலையில் சிக்காமல் நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும்.
பிக்குகள் என்ற வகையில் எமது இனத்திற்கும் , நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தமையினால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் எங்களுக்கென்று சங்கங்களை அமைத்துக் கொண்டு இதுவரையும் செயற்பட்டோம். ஆனால் தற்போது சிறந்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது , பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றிப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி.இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில் நாங்கள் இனியும் சங்கங்களை அமைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால் எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் தேரர்களாகிய நாங்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட வேண்டும். அதேவேளைசிறந்த ஆட்சியாளன் நாட்டுக்கு கிடைத்துள்ளதை போன்று பாராளுமன்றத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். விரைவில் பொது தேர்தலை நடத்தி சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.
இனப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காணுவதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதன்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்வினை பெற்று நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அதேவேளை ஆகம விவகாரங்கள் தொடர்பில் ஒரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தனித்தனி மதம் என்ற பிரிவினை ஏற்படாது என்றார்.