இந்தியா வரும் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சாரக் கார்கள்?


இந்தியாவில் இரண்டு மின்சார கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.





அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மகிழுந்து நிறுவனம் மின்சார மகிழுந்து தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. சொகுசு, அதிக பயண தூரம், சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.





அந்த வகையில், இந்தியாவிலும் தனது மின்சார மகிழுந்துகளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெஸ்லா திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 செடான் மகிழுந்தையும், மாடல் ஒய் என்ற க்ராஸ்ஓவர் ரக எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாம்.





மேலும், சீனாவில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த இரண்டு மகிழுந்துகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கவும் முடிவு செய்துள்ளதாம். இதில், மாடல் 3 மகிழுந்து மிக குறைவான டெஸ்லா காராக இருக்கும் என்பதால், இந்தியாவில் விற்பனையில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





இருப்பினும், சீனாவிலிருந்து மகிழுந்துகளை இறக்குமதி செய்வதில் பல்வேறு நடைமுறை மற்றும் விதிமுறைகள் சவாலாக இருப்பதால், விரைவில் இதுகுறித்து டெஸ்லா இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. மேலும், இந்தியாவில் அமைக்க திட்டமிட்ட மகிழுந்து ஆலையையும் சீனாவில் அமைக்க முடிவு செய்தது.





இந்தியாவில் மின்சார மகிழுந்துகளுக்கான கட்டமைப்பு போதிய அளவு வலுவாக இல்லாததே, இந்த முடிவுக்கு காரணம். இதே காரணத்தால்தான், இந்தியாவில் மகிழுந்துகளை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வருவதிலும் டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை.





எனினும், இந்தியாவில் மின்சார மகிழுந்துகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு இந்தியாவில் களமிறங்குவதற்கான திட்டங்கள் குறித்து டெஸ்லா அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





டெஸ்லா மாடல் 3 செடான் மகிழுந்து ரூ.22 லட்சம் மதிப்பில் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்யும்போது வரி அதிகமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, எந்த மாதிரியான வர்த்தக முடிவுடன் இந்தியாவில் டெஸ்லா கால் பதிக்கும் என்பதை காண ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.


Blogger இயக்குவது.