''சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்ட அனுமதி''-அயோத்தி வழக்கில் அறிய வேண்டிய 10 தகவல்கள்!


5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அயோத்தி வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.





5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அயோத்தி வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. முன்னதாக தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்குத் தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்





  1. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
  2. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்களாக அயோத்தி வழக்கை விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, சந்திரா சூட், அசோக்பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 
  3. நவம்பர் 17-ம்தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதற்கு முன்பாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேதி குறிக்கப்பட்டிருந்தது. 
  4. தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் காணப்பட்டது. உத்தரப்பிதேசத்தில் மட்டும் 12 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 
  5. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 
  6. தீர்ப்பையொட்டி ட்வீட் செய்திருந்த  பிரதமர் நரேந்திர மோடி, 'அயோத்தி தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடையாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், நமது நாட்டின் அமைதியையும், நல்லிணகக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' என்று கூறியிருந்தார். 
  7. 1980-களில் அயோத்தி பிரச்னை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்கு பிரச்னை நீடித்திருந்தது. 
  8. அயோத்தி வழக்கு தொடர்பாக 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கியது. இதன்படி, சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது. 
  9. அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ல் வலது சாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் 2 ஆயிரம்பேர் கொல்லப்பட்டனர். 
  10. தீர்ப்பையொட்டி அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று பல்வேறு இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

Blogger இயக்குவது.