அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா?

ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை நடத்தி இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். பல ஆய்வு நிறுவனங்கள் மற்றும் 20 பெரிய நிறுவனங்களுக்கு சீனா இந்த தரவுகளை அறிந்துகொள்வதற்கான அனுமதியை அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அமேசானில் பாதுகாப்பு சோதனை மேற்கொண்டபோது, சீனா உளவு பார்க்கிறதாக முதல் தகவல் வெளியானது.

பின்னர் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள், நடத்தும் உயர் ரகசிய விசாரணையை தீவிரப்படுத்தியது. அதில், பாதுகாப்பு தரவு மையங்கள், இயங்கிக் கொண்டிருக்கும் போர் கப்பல்கள், சி.ஐ.ஏ ட்ரோன்களால் திரட்டப்பட்டுள்ள தரவுகளின் சர்வர்களின் பாதுகாப்பு சமரசத்துக்கு உள்ளாகியது தெரிய வந்துள்ளது.

தாக்குதலை நடத்த சீனாவிற்கு வசதியாக இருந்தது என்று கூறும் ப்ளூம்பர்க் அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. உலகில் இருக்கும் 90 சதவீத கணினிகள் சீனாவில் தயாரிக்கப்படுபவை.

ஆப்பிள், அமேசான் மற்றும் பிற முக்கிய வங்கிகளும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர்களை பயன்படுத்துகின்றன.

இந்த விசாரணையால் சில நிறுவனங்கள் சூப்பர் மைக்ரோ தயாரித்த தங்கள் சர்வர்களை அகற்றி, அந்நிறுவனத்துடனான தொழிலை முடித்து கொண்டிருப்பதாகவும் ப்ளூம்பர்க் கூறுகிறது.

ஆனால் ப்ளூம்பர்க் கூறும் அனைத்தையும் அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முற்றிலும் மறுக்கின்றன.

இது தொடர்பாக அமேசான் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், "தீங்குவிளைவிக்கும் சிப்புகள் அல்லது ஹார்ட்வேர் இருப்பதாக சொல்லும் எந்த கூற்றுக்கும் ஆதாரம் இல்லை" என்று கூறியுள்ளது.

பாதுகாப்பு விவகாரம் குறித்து பலமுறை கூறிய பிறகு தீவிர விசாரணைகள் நடத்திய போதிலும், எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் நிறுவனம் கூறுகையில், "அரசாங்கம் விசாரணை நடத்துகிறதா என்பது தெரியாது என்றும், சீன ஹேக்கர்களுக்கு பயந்து எந்த வாடிக்கையாளர்களும் எங்கள் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
மூலம்: பிபிசி
Blogger இயக்குவது.